கடல் பாறையில் செல்பி...! 3 குழந்தைகள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட தாய்...!
|மும்பையில் கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண்முன்னே அலைகள் இழுத்துச் சென்றது.
மும்பை
மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஆங்காங்கே பாறைகள் இருக்கின்றன. கடலில் சீற்றம் காணப்படும்போது பாறைகளைத் தண்ணீர் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரிப்பதுண்டு. அது போன்ற நேரங்களில் தீயணைப்புத்துறையினர் அல்லது லைப் கார்டுகள் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதுண்டு.
ஆனாலும், இந்தக் கடற்கரையில் நள்ளிரவுவரை இது போன்று கடலுக்குள் இருக்கும் பாறையில் காதலர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். தற்போது மழைக்காலம் என்பதால், கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல், கடலுக்குள் இருக்கும் பாறைக்குச் செல்வதை மக்கள் வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர்.
ஜோதி சொனார்(27) என்ற பெண் தன் கணவர் முகேஷ் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பாந்த்ரா கடற்கரைக்குச் சென்றிருந்தார். கடற்கரையில் அவர் சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
அந்த நேரம் ஜோதியும் அவரின் கணவரும் குழந்தைகளை கடற்கரையில் விட்டுவிட்டு, கடலுக்குள் இருக்கும் பாறையில் அமர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் சென்றனர். அவர்கள் பாறையில் அமர்ந்து செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர்.
அந்த நேரம் கடலில் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் பாறையில் மோதி அவர்கள் இருவர்மீதும் பட்டுச் சென்றது. கடற்கரையிலிருந்த குழந்தைகள் பயத்தில், `அம்மா வாருங்கள்' என்று கத்திக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களால் உடனே அங்கிருந்து வரமுடியாத அளவுக்கு கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் இருந்தது.
ஒரு கட்டத்தில் பாறையில் அமர்ந்திருந்த இரண்டு பேரையும் வேகமாக வந்த ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. குழந்தைகள் கடற்கரையிலிருந்துகொண்டு கூச்சல் போட்டனர்.
கடல் அலைகளிலிருந்து ஜோதியின் கணவரை மட்டுமே லைப் கார்டுகளால் காப்பாற்ற முடிந்தது. ஜோதி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். ஜோதியின் உடல் 20 மணி நேர தேடுதலுக்குப் பிறகே மீட்கப்பட்டது. அவர்கள் கடலுக்குள் அலைகளால் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.