< Back
தேசிய செய்திகள்
மும்பை: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

மும்பை: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்

தினத்தந்தி
|
1 Feb 2024 9:12 AM GMT

ஏற்கனவே கடந்த மாதம் 24-ந்தேதி ரோகித் பவாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மும்பை,

மராட்டிய மாநில கூட்டுறவுத் துறையில் சர்க்கரை ஆலைகளை மோசடியான முறைகளில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 5-ந்தேதி மும்பை பாராமதி பகுதியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மருமகன் வழிப் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவாருக்கு சொந்தமான பாராமதி ஆக்ரோ நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 24-ந்தேதி ரோகித் பவார் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அடுத்தகட்ட விசாரணைக்கு பிப்ரவரி 1-ந்தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர்.

இதன்படி ரோகித் பவார் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். ரோகித் பவார் மீதான விசாரணையை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மும்பையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கடந்த 24-ந்தேதி நடந்த விசாரணையின்போது அமலாக்கத்துறையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தாக குறிப்பிட்ட ரோகித் பவார், பா.ஜ.க. அரசையும், அதன் விசாரணை அமைப்புகளையும் எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்