மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி
|அக்சய்யின் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் தலுஜா சிறையில் இருந்த அக்சய்யை காவலில் எடுக்க போலீசார் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் மும்பை நகரருகே பத்லாபூர் பகுதியில் நர்சரி பள்ளியில் படித்த 4 வயதுடைய 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியான அக்சய் ஷிண்டே (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.
அப்போது, கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கியை பறித்து பலமுறை அவரை நோக்கி சுட்டுள்ளார். இதில் அவர் காயமடைந்து உள்ளார். இதனை பார்த்த மற்றொரு காவலர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த அக்சய் பின்னர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, அக்சய்யின் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் தலுஜா சிறையில் இருந்த அக்சய்யை காவலில் எடுக்க போலீசார் சென்றுள்ளனர். திருமணம் நடந்து 5 நாட்களில் முதல் மனைவியை விட்டு அக்சய் பிரிந்து சென்றுள்ளார். அவர், முதல் மனைவியை பலாத்காரம் செய்ததுடன், துன்புறுத்தலிலும் ஈடுபட்டு உள்ளார் என முதல் மனைவி போலீசில் தெரிவித்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் அவரை அழைத்து சென்றபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் அக்சய் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார். சில நாட்களில், பள்ளி கழிவறையில் சிறுமிகளை அக்சய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிகள் பெற்றோரிடம் நடந்த விசயங்களை கூறிய பின்னர் 5 நாட்கள் கழித்து, ஆகஸ்டு 17-ல் அக்சய் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், ஆயிரக்கணக்கான மக்கள் தானே நகரில் ரெயில்வே வழித்தடங்களை மறித்து மணிக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வந்து கலைந்து போக செய்தனர்.