< Back
தேசிய செய்திகள்
பலாத்கார குற்றச்சாட்டு நபருக்கு ஜாமீன்... பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்த மும்பை ஐகோர்ட்டு
தேசிய செய்திகள்

பலாத்கார குற்றச்சாட்டு நபருக்கு ஜாமீன்... பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்த மும்பை ஐகோர்ட்டு

தினத்தந்தி
|
6 Oct 2022 8:18 PM IST

திருமணம் செய்து கொள்வேன் என கூறி பலாத்காரம் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதுடன், பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.



புனே,


மும்பை ஐகோர்ட்டு அமர்வு முன்பு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், 31 வயது பெண் ஒருவர், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி 35 வயது நபர் தன்னை பலாத்காரம் செய்து விட்டார் என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றிய வழக்கு விசாரணைக்கு பின்பு மும்பை ஐகோர்ட்டு அமர்வு கூறும்போது, எந்தவோர் இடத்திலும் தனது ஒப்புதல் இல்லாமல் இப்படி நடந்து விட்டது என அந்த பெண் கூறவேயில்லை என தெரிவித்தது.

இதனால், வழக்கு திசை திரும்ப கூடிய சூழலில் அந்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோர்ட்டில் கூறும்போது, குற்றவாளிக்கு எந்தவொரு நிவாரணமும் அளிக்கப்பட கூடாது. அந்த பெண்ணிடம் ரூ.21 லட்சம் பணம் மோசடி செய்திருக்கிறார். திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதி கூறியிருக்கிறார். அதன்பின்னரே உறவுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது என கூறினார்.

இதுபோன்று பல பெண்களை அந்த நபர் மோசடி செய்திருக்கிறார். அவர்களின் வாக்குமூலங்களையும் விசாரணை அதிகாரி பெற்று, பதிவு செய்து இருக்கிறார் என கோர்ட்டில் வாதிட்டு இருக்கிறார்.

அதற்கு நீதிபதி பாரதி டாங்ரே கூறும்போது, பெண்களெல்லாம் அவருக்காக உருகுவதற்கு அந்த நபரென்ன ஹீரோவா? அவர்கள் என்ன செய்கிறோம் என அந்த பெண்களுக்கு தெரியவில்லையா? 31 வயதுடைய இந்த பெண்ணுக்கு அந்த நபரை 7 ஆண்டுகளாக தெரியும்.

வழக்கறிஞர் அவர்களே. பாதிக்கப்பட்ட நபர் என்ற விசயம் ஒன்றை கையில் எடுத்து கொண்டு, ஆடும் விளையாட்டை உங்களது கட்சிக்காரரிடம் நிறுத்தும்படி கூறுங்கள் என பேசியுள்ளார்.

அந்த அமர்வு தொடர்ந்து கூறும்போது, மற்றொரு பெண்ணுடன் அந்த நபரை பார்த்த பின்னரே, அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்வது என்ற நடவடிக்கையில் இந்த பெண் ஈடுபட்டு உள்ளார் போன்று தெரிகிறது.

இந்த வழக்கில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள். விளைவுகளை பற்றி நன்றாக புரிந்தவர்கள். அதனால், போலீசாரின் காவலுக்கு குற்றவாளியை அனுப்ப வேண்டிய தேவையில்லை என கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

சமூக ஊடகத்தில் இந்த பெண்ணுக்கு அவதூறு ஏற்படுத்தும் செயல்களை செய்ய குற்றவாளியை அனுமதிக்க கூடாது என பெண்ணின் வழக்கறிஞர் கோர்ட்டில் கேட்டு கொண்டார்.

அதற்கு நீதிபதி டாங்ரே, நீங்களும் கூட தூண்டி விடாமல் இருங்கள். குற்றவாளியின் முன்னாள் காதலிகளை தேடாமல் இருங்கள். போலீசாரும் இதனை நிறுத்த வேண்டும். 31 வயது பெண் மற்றும் 35 வயது ஆண் என வயது முதிர்ந்த இருவருக்கு இடையேயான விசயம் இது என கூறினார். இதன்பின்னர், சமூக ஊடகங்களில் இரு தரப்பினரும் எந்தவொரு பதிவையும் வெளியிட கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்