150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து கர்னாக் பாலம் ரெயில்வே துறையால் அகற்றம்!
|பழைய பாலத்தின் சுமார் 450 டன் இரும்பை எடுத்துச் செல்ல நான்கு கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை,
மும்பையில் இருந்த ஆங்கிலேயர் காலத்து பாலம், ரெயில்வே துறையால் அகற்றப்பட்டது.
புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினால் ஆன கர்னக் மேம்பாலம் இருந்தது. இந்த பாலம் 1866-67 இல் கட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டே பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐஐடி நிபுணர் குழு, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பற்றது என்று சான்றளித்தது.
இதையடுத்து, பாலத்தை அகற்ற ரெயில்வே திட்டம் தீட்டியது. நவம்பர் 19ஆம் தேதி இரவு 11 மணிக்குத் தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு இடிக்கும் பணி நிறைவடைந்தது. பாலத்தை அகற்றுவதற்கு ரெயில்வேதுறை 500 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், பாலம் 44 துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலம் அகற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை, மத்திய ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பகிர்ந்துள்ளார். பழைய பாலத்தின் சுமார் 450 டன் இரும்பை எடுத்துச் செல்ல நான்கு கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ரெயில்வே துறை, 19 மாதங்களுக்குள் கார்னாக் பாலத்திற்குப் பதிலாக ஒரு பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 70 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட புதிய பாலம் ரூ.49 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.