மும்பை; 11 நாட்களில், ஐ.சி.யு.வில் கொரோனா நோயாளிகள் 187% வரை அதிகரிப்பு
|மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 11 நாட்களில், ஐ.சி.யு.வில் சேர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 187% வரை அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 113 நாளில் முதல் முறையாக நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 13 ஆயிரம் கடந்து, 13 ஆயிரத்து 216 ஆக பதிவானது.
நேற்று இது சற்று குறைந்தது. இதன்படி நேற்று ஒரு நாளில் 12,899 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனினும், மும்பைவாசிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் தொடருகிறது. கடந்த 11 நாட்களில், தனியார் மருத்துவமனைகளில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 187 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.
அரசு மருத்துவமனைகளின் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 117 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. அவர்களில் பலர் மூத்த குடிமக்கள். ஒரு சிலர் இளைஞர்களாகவும் உள்ளனர்.
மும்பையில் கடந்த 4 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 ஆயிரத்திற்கும் கூடுதலாக தொற்று பதிவாகி வருகிறது. அவர்களில் 100க்கும் கூடுதலான நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டி உள்ளது.
கடந்த 7ந்தேதி நிலவரப்படி தனியார் மருத்துவமனைகளின் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. இது நேற்று (19ந்தேதி) 66 ஆக அதிகரித்து உள்ளது.
முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் அவசியம் பற்றி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை மக்கள் கைவிட்டு விட்டது நிலைமையை மோசமடைய செய்து விட்டது.
அதனால், முக கவசம் அணிவது அவசியம் என்றும் அறிகுறிகள் காணப்பட்டால், தனிமைப்படுத்தி கொண்டு, மருத்துவரை தொடர்பு கொண்டு, முன்பே சிகிச்சையை தொடங்கி தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.