ஏர்போர்ட் ஓடுபாதை அருகே அமர்ந்து பயணிகள் சாப்பிட்ட விவகாரம்.. இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ்
|பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்வதில் மும்பை விமான நிலையமும், விமான நிறுவனமும் கவனத்துடன் செயல்படவில்லை என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான விமானங்கள் பல மணி நேர தாமதத்திற்கு பிறகே இயக்கப்பட்டன. கோவாவில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. மும்பையில் அந்த விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அவசரம் அவசரமாக கீழே இறங்கினர். ஓடுபாதைக்கு அருகில் உள்ள டார்மாக் பகுதியில் அமர்ந்து உணவு உண்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், விமான நிறுவனம் மீதும், மும்பை விமான நிலையம் மீதும் புகார் எழுந்தது.
விமான ஓடுபாதையின் அருகில் பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்துக்கு சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நிலைமை தொடர்பாக முன்னறிவிப்பு செய்வதிலும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்வதிலும் கவனத்துடன் செயல்படவில்லை என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டதற்காகவும், மும்பையில் நடந்த சம்பவத்துக்காகவும் பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.