< Back
தேசிய செய்திகள்
மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு
தேசிய செய்திகள்

மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: பாதுகாப்பு அதிகரிப்பு

தினத்தந்தி
|
21 Aug 2022 4:22 AM GMT

2008-ம் ஆண்டை போல மும்பையை தகர்க்கப்போவதாக போலீசாருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பை அருகே உள்ள ராய்காட் கடலில் கடந்த வியாழக்கிழமை ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் ஆயுத படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா? என்று மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல்கள் வந்தன. அதில் 2008-ம் ஆண்டு நடந்ததை போல மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டப்பட்டு இருந்தது.

இதேபோல மும்பையை தகர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, அங்கு 6 பேர் தாக்குதல் நடத்துவார்கள், அது 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலை நினைவுபடுத்தும் எனவும் மிரட்டப்பட்டு இருந்தது. இதுதவிர குறுந்தகவல் ஒன்றில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், அமெரிக்காவால் சமீபத்தில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆகியோரின் பெயரும் இடம்பெற்று இருந்தன.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக மும்பையில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. குறிப்பாக போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். மேலும் கடலோர ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டன.இந்தநிலையில் போலீசாருக்கு மிரட்டல் வந்த போன் நம்பர் பாகிஸ்தானை சேர்ந்தது என்ற மற்றொரு அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் நிருபர்களிடம் கூறுகையில், " மிரட்டல் குறுந்தகவல் வந்த போன் நம்பர் கோடு பாகிஸ்தானை சேர்ந்தது. இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்துகிறார்கள். குறுந்தகவலில் இந்தியாவை சேர்ந்த சில செல்போன் நம்பர்களும் அனுப்பப்பட்டுள்ளன. அந்த எண்களை தொடர்பு கொள்ள உள்ளோம். மும்பை நகர மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களின் பொறுப்பு. மும்பை போலீசார் கடலோர காவல் படையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்