புகழ்பெற்ற கோவில்களுக்கு அருகில் பல மாடி கட்டிடங்கள் கட்டக்கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு
|மொத்த பரப்பளவில் 15-16 சதவீதத்தை பசுமையான இடமாக ஒதுக்குவது அவசியம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார்.
லக்னோ,
கோவில்களின் பழமையான மற்றும் வரலாற்று சாரத்தை பராமரிக்கும் வகையில், கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவன் போன்ற மத நகரங்களில் கோவில்களின் உயரத்திற்கு மேல் எந்த வகையான கட்டிடங்களையும் கட்ட அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நடந்த கூட்டத்தில், கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவனின் திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட வளர்ச்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஜிஐஎஸ் அடிப்படையிலான மாஸ்டர் பிளான்-2031 ஐ முதல்-மந்திரி மதிப்பாய்வு செய்து தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவன் போன்ற மத நகரங்களின் பழமையான மற்றும் வரலாற்று சாரத்தை பராமரிக்க, கோவில்கள் மற்றும் குறிப்பிடத்தக்க கட்டமைப்புகளுக்கு பெயர் பெற்ற, இந்த கோவில்கள்/புனித கட்டிடங்களின் உயரத்தை விட அதிகமான கட்டமைப்புகளை அவற்றைச் சுற்றி அமைய அனுமதிக்கக்கூடாது. மாஸ்டர் திட்டத்தில் ஒழுங்குமுறை இணைக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நகரில் மின்சார பேருந்துகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றும், வழக்கமான எரிபொருள் பேருந்துகளை முடிந்தவரை நகரத்திற்கு வெளியே வைக்க வேண்டும் என்றும் மல்டிலெவல் பார்க்கிங்கிற்கு பொருத்தமான இடங்களைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு நகரத்தின் மாஸ்டர் பிளானுக்குள்ளும் மொத்த பரப்பளவில் 15-16 சதவீதத்தை பசுமையான இடமாக ஒதுக்குவது அவசியம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.