கூட்டுறவு சங்க திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் - அமித்ஷா
|வணிக நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அமித்ஷா கூறியுள்ளார்.
கூட்டுறவு மாநாடு
சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாடு நடந்தது. இதில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவுத்துறைக்கு என கடந்த 2021-ம் ஆண்டு தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட்ட பிறகு, இந்த துறையில் ஏராளமான மாற்றங்கள் சாத்தியமாகி உள்ளன. இது வருங்காலத்திலும் தொடரும். அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் உரிமைகளை சீர்குலைக்காமல் கூட்டுறவு சட்டத்தில் ஒரே சீரான தன்மையை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறைகளை நிவர்த்தி செய்யும்
பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியுடன், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் பணி ஒருமித்த கருத்துடன் பாராளுமன்ற குழுவால் செய்யப்பட்டு உள்ளது. இந்த திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிேலயே கொண்டு வரப்படும். இந்த மசோதாவானது, அரசியலமைப்பின் சில விதிகளுக்கு இணங்க கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. இதன் மூலம் வணிகம் செய்வது எளிதாகும்.
கூட்டுறவுத்துறையை அடுத்த 25 ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்த உதவும் வகையில் புதிய கூட்டுறவு சட்டத்தை உருவாக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதைப்போல கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமைச்சகங்களுக்கு இடையேயான விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
நாட்டில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வெவ்வேறு துணை விதிகளை கொண்டிருக்கின்றன. இவற்றை ஒரே மாதிரியாக மாற்றுவதற்காக மாதிரி துணை விதிகளை கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கி இருக்கிறது.
இந்த மாதிரி துணை விதிகளை 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இதன் மூலம் சுமார் 85 சதவீத தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், செப்டம்பர் மாதம் முதல் ஒரே மாதிரியான துணை விதிகளை கொண்டு செயல்படும்.
நாட்டில் தற்போது 55 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதை அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சமாக உயர்த்துவதே எங்கள் இலக்காகும். அதாவது ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும். அப்போதுதான் கூட்டுறவுத்துறையின் அடித்தளம் வலுப்பெறும்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.