தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி
|தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
ஆம்னி பஸ்கள்
பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கும் தினமும் 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் சரமாரியாக உயர்த்தப்படுவதாக பயணிகளிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் கூட தசரா பண்டிகையின் போது ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் தாறுமாறாக எகிறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இருந்தனர். ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
பெங்களூரு-உப்பள்ளிக்கு ரூ.8 ஆயிரம்
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது பெங்களூருவில் இருந்து வடகர்நாடகத்திற்கு செல்லும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சாதாரண நாட்களில் பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு ஏ.சி. இல்லாத ஆம்னி பஸ்களில் ரூ.800 முதல் ரூ.900 வரையும், ஏ.சி. வசதியுடைய பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரையும் கட்டணம் கொடுத்து சென்று விடலாம்.
ஆனால் தற்போது உப்பள்ளிக்கு செல்ல ஏ.சி. இல்லாத ஆம்னி பஸ்களில் ரூ.2,000 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு ஏ.சி. பஸ்சில் பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு ரூ.8 ஆயிரம் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுதவிர பெலகாவி, பாகல்கோட்டை, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நெல்லைக்கு...
இதேபோல், ெபங்களூருவில் இருந்து தமிழக தென்மாவட்டமான நெல்லைக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி. ஆம்னி பஸ்சில் ரூ.4,600 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சாதாரண நாட்களில் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. ஆம்னி பஸ்சில் ரூ.1,000 முதல் ரூ.1,500 வசூலிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அமர்ந்து செல்லும் ஏ.சி. ஆம்னி பஸ்சில் ரூ.2 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ரூ.900 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரெயில்களும், அரசு பஸ்களும் நிரம்பி விட்டதால், வேறு வழியின்றி மக்கள் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணித்தனர். விமான கட்டணமே குறைவாக இருக்கும் நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
கடிவாளம் போடப்படுமா?- மக்கள் எதிர்பார்ப்பு
பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு மற்றும் வெளிமாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள், பண்டிகை காலங்களில் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்துகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் தனியார் ஆம்னி பஸ் நிர்வாகத்துக்கு மாநில அரசு கடிவாளம் போடுமா என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும், ஆம்னி பஸ் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.