உத்தரபிரதேசத்தில் சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவ் உடல் தகனம்; தலைவர்கள் இறுதி அஞ்சலி
|உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவின் உடல் தகனம் ெசய்யப்பட்டது. ராஜ்நாத்சிங், அசோக் கெலாட், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
காலமானார்
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேசத்தில் 3 தடவை முதல்-மந்திரி பதவி வகித்தவருமான முலாயம்சிங் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மெதந்தா ஆஸ்பத்திரியில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் காலை அவர் காலமானார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியிலேயே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
உ.பி.க்கு உடல் வந்தது
பின்னர், முலாயம்சிங் யாதவின் உடல், ஆஸ்பத்திரியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இடாவா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான சைபாய்க்கு எடுத்துச்செல்லப்பட் டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், நேற்றும் பலர் முலாயம்சிங் யாதவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், முலாயம்சிங் யாதவ் உடல், சைபாய் கிராமத்தில் உள்ள தகன மைதானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
ராஜ்நாத்சிங்
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், உத்தரபிரதேச மாநில துைண முதல்-மந்திரிகள் கேசவபிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோர் முலாயம்சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சரத்பவார்
மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சுப்ரியா சுலே, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத், ராஷ்டிரீய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய்சிங் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி, அஞ்சலி செலுத்திவிட்டு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.
அனில் அம்பானி
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகையும், சமாஜ்வாடி எம்.பி.யுமான ஜெயா பச்சன், அவருடைய மகன் நடிகர் அபிஷேக் பச்சன், உத்தரபிரதேச மந்திரி ஜிதின் பிரசாதா, பா.ஜனதா எம்.பி. ரீடா பகுகுணா ஜோஷி, முலாயம்சிங்கின் சகோதரர் சிவபால் யாதவ்,
யோகா குரு பாபா ராம்தேவ், மாநில காங்கிரஸ் பிரமுகர் பிரமோத் திவாரி, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத், சமாஜ்வாடி கட்சி பிரமுகர்கள் ஆசம்கான், ராம்கோபால் யாதவ் உள்பட ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், முலாயம்சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது.