எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
|எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில், நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் மோகன் லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இதனிடையே, ஹேமா கமிஷன் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 4 நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான முகேஷும் ஒருவர். முகேஷ் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதேவேளை, பாலியல் வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி முகேஷ் எர்ணாகுளம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த வியாழக்கிழமை விசாரித்த கோர்ட்டு முகேஷை 3ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது.
இந்நிலையில், எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை என்று கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் கோவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் திரைப்பட தயாரிப்பு கொள்கைக்குழுவில் இருந்து முகேஷ் நீக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை. நாட்டில் மொத்தம் 16 எம்.பி.க்கள், 135 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் யாரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை' என்றார்.