இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி..! போர்ப்ஸ் பட்டியலில் மீண்டும் முதலிடம்
|முகேஷ் அம்பானி, 92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பணக்கார இந்தியர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த அவர், இந்த ஆண்டு 92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி (68 பில்லியன் டாலர்), இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு முதல் முறையாக அம்பானியை முந்தி இந்தியாவின் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி. ஆனால், ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையானது, அதானி குழுமத்தின் ஆணிவேரையே அசைத்தது. அதானி குழும பங்குகள் வீழ்ச்சியடைந்தன. எனினும் சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியது.
அதானி குழுமம் சரிவில் இருந்து ஓரளவு மீண்டு வந்த போதிலும், அவரது குடும்பத்தை உள்ளடக்கிய அவரது நிகர மதிப்பு சரிந்ததால் இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
கடந்த முறை 5வது இடத்தில் இருந்த எச்.சி.எல். டெக்னாலஜி தலைவர் ஷிவ் நாடார், இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறி 3வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 29.3 பில்லியன் டாலர்.
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள்:
1. முகேஷ் அம்பானி- 92 பில்லியன் டாலர்
2. கவுதம் அதானி - 68 பில்லியன் டாலர்
3. ஷிவ் நாடார்- 29.3 பில்லியன் டாலர்
4. சாவித்ரி ஜிண்டால்- 24 பில்லியன் டாலர்
5. ராதாகிஷன் தமானி- 23 பில்லியன் டாலர்
6. சைரஸ் பூனவல்லா- 20.7 பில்லியன் டாலர்
7. இந்துஜா குடும்பம் - 20 பில்லியன் டாலர்
8. திலீப் ஷங்வி - 19 பில்லியன் டாலர்
9. குமார் பிர்லா - 17.5 பில்லியன் டாலர்
10. ஷபூர் மிஸ்த்ரி குடும்பம் - 16.9 பில்லியன் டாலர்.
இந்த ஆண்டு இந்தியாவின் முதல் 100 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 799 பில்லியன் டாலர் என போர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.