பல கோடி மதிப்பிலான பன்னடுக்கு கட்டிடம்... பணியாளருக்கு பரிசாக வழங்கி அழகு பார்த்த முகேஷ் அம்பானி
|ரூ.ஆயிரம் கோடி மதிப்பிலான பன்னடுக்கு கட்டிடம் ஒன்றை முகேஷ் அம்பானி தனது பணியாளருக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
புதுடெல்லி,
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவரது நீண்டகால பணியாளராக இருந்து வருபவர் மனோஜ் மோடி. ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக வளருவதற்கு வேண்டிய அனைத்து கோடிக்கணக்கான ஒப்பந்தங்களுக்கும் முன்னின்று செயல்பட்டு அதனை வெற்றியாக்கிய பெருமைக்கு உரியவர். முகேஷ் அம்பானியின் வலது கரம்போல் திகழ்ந்து வருபவர் மனோஜ் மோடி.
இந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நீண்டகால பணியாளரான மோடிக்கு, முகேஷ் அம்பானி விலையுயர்ந்த கட்டிடம் ஒன்றை தனது பரிசாக வழங்கி உள்ளார்.
மும்பையில் முக்கிய பகுதியில் அமைந்த நிபியான் கடல் சாலை பகுதியில் 22 தளங்கள் கொண்ட பிருந்தாவன் என பெயரிடப்பட்ட கட்டிடம் ஒன்று அமைந்து உள்ளது. ரூ.ஆயிரத்து ஐநூறு கோடி மதிப்பிலான இந்த கட்டிடம் அம்பானியால் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில்தான் மகேஷ்வரி என பெயரிடப்பட்ட வீட்டில், ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான சஜ்ஜன் ஜிண்டால் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒரு சதுர அடி ரூ.45 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விலை போக கூடியது. இதன்படி, மனோஜ் மோடியின் உயர்ந்து நிற்கும் அந்த கட்டிடத்தின் மொத்த மதிப்பு ரூ.1,500 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு தளமும் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்து உள்ளது. ஒட்டுமொத்தத்தில் கட்டிடம் 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவை கொண்டது. இதில், கட்டிடத்தின் முதல் 7 தளங்கள் கார் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்களில் முதன்மையானவராக இருந்தபோதும், தனது நீண்டகால பணியாளரும் பயன்பெறும் வகையில் விலையுயர்ந்த இந்த பரிசை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்று உள்ளார்.