< Back
தேசிய செய்திகள்
வளர்ப்பு நாய்கள் சண்டையால் விபரீதம்; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
தேசிய செய்திகள்

வளர்ப்பு நாய்கள் சண்டையால் விபரீதம்; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

தினத்தந்தி
|
18 Aug 2023 2:05 PM IST

வங்கி செக்யூரிட்டி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

இந்தூர்,

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேங்க் ஆப் பரோடாவின் ஒரு கிளை உள்ளது. அங்கு செக்யூரிட்டியாக பணி புரிந்து வந்தவர், ராஜ்பால் ரஜாவத். இவரிடம் லைசன்ஸுடன் கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளது. மேலும் இவர் தன்னுடன் நாய் ஒன்றையும் வளர்த்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று(வியாழக்கிழமை) இரவு அவர், தன்னுடைய நாயுடன் கிருஷ்ணாபாக் காலனியில் வாக்கிங் சென்றார். திடீரென இந்த நாய்க்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரின் நாய்க்கும் சண்டை வந்தது. இரண்டு நாய்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் அவைகளின் உரிமையாளர்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் கோபமடைந்த ராஜ்பால் ரஜாவத், வேகமாக வீடு திரும்பினார். அங்கு தான் வைத்திருந்த இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் மொட்டைமாடிக்கு சென்றார். அங்கிருந்து 2 முறை வானில் சுட்டார்.

இருப்பினும் அவருக்கு கோபம் அடங்கவில்லை. ரோட்டில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில், அந்தப் பகுதியைச் சேர்ந்த விமல்(வயது 35) மற்றும் ராகுல் வர்மா(வயது 28) என்ற இருவர் குண்டடிப்பட்டு உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய ராஜ்பால் ரஜாவத்தை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்