10 வயதில் இருந்தே மவுனமாக இருக்கும் மோனி பாபா : ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்க்காக காத்திருக்கிறார்...!
|விழாவில் பங்கேற்க வரும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், தூதரக அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
போபால்,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த 2019ல் தொடங்கியது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். மொத்தம் 3 அடுக்குகளாக நாகரா கட்டக்கலையில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது முதற்கட்ட பணிகள் என்பது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
வரும் 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் 3 ஆயிரம் விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக 10,000 பேர் வரை விழாவில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விழாவில் பங்கேற்க வரும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், தூதரக அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மத்திய பிரதேசத்தில் மோனி பாபா என்பவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து தமது 10 வயதில் இருந்தே மவுனத்தை கடைப்பிடித்து வருகிறார். எங்கு சென்றாலும் வெறுங்காலுடன்தான் சென்று வருகிறார். 10 வயதில் இருந்தே அவர் மவுனமாக இருப்பதால் மக்கள் அவரை மோனி பாபா என்று அழைத்து வருகின்றனர்.
மோகன் கோபால் தாஸ் என்று அழைக்கப்பட்ட மோனி பாபா, பாபர் மசூதியை அகற்றிய காரிய சேவகர்களுடன் அயோத்தியில் களத்தில் இருந்தவர். பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க எனக்கும் அனுமதி வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பித்து வருகிறார். எல்லாக் கேள்விகளுக்கும் கையில் வைத்திருக்கும் ஸ்லேட்டில் பதில் எழுதிச் சொல்கிறார்.
மோனி பாபாவின் பூர்வீகம் சூர்யா நகர் புலாவ் பாலாஜி ஆகும். தற்போது அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள டாடியா கோவில்களில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.