ம.பி.: கோவில் படிக்கட்டு கிணறு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு..!
|மத்தியபிரதேசத்தில் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றின் மீது கட்டப்பட்ட காண்கிரீட் பலகை திடீரென இடிந்து விழுந்தது.
இதில், படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இந்தூர் ஆட்சியர் கூறும்போது, மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணவில்லை, 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் சிகிச்சைக்குப் பின் பத்திரமாக வீடு திரும்பினர். காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது" என்று இந்தூர் ஆட்சியர் தெரிவித்தார்.
கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர். ராம நவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
சுமார் 40 ஆண்டுகள் பழமையான இக்கோயில், அந்த இடத்தில் இருந்த கிணற்றை கான்கிரீட் பலகையால் மூடி கட்டப்பட்டது. பழமையான கிணற்றின் மேல் ஸ்லாப் அமைக்க நிர்வாகம் அனுமதித்தது எப்படி என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் செல்ல ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் குற்றம் சாட்டினார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அறிவித்து உள்ளார்.