
கடவுள் ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம் - சிவராஜ் சிங் சவுகான்

கடவுள் ஒவ்வொரு மனிதனிலும் இருக்கிறார் என்று தான் நம்புவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பர்வேஷ் சுக்லா என்பவர், போதையில் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மேலும், அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. பழங்குடியினரை அவமதித்தது தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, பர்வேஷ் சுக்லா தலைமறைவான நிலையில் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்-மந்திரியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து போலீசார் பர்வேஷ் சுக்லாவை கைது செய்தனர். அதன்பின் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அவரது வீட்டையும் அதிகாரிகள் புல்டோசர்கள் மூலம் இடித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து பேசிய மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருடைய கால்களை கழுவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், "என்னைப் பொறுத்தவரை, ஏழைகள் கடவுள், பொதுமக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள். மக்களுக்கு சேவை செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம். ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறோம். தஷ்மத் ராவத்துடன் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தால் நான் வேதனை அடைந்தேன்... ஏழைகளுக்கு மரியாதையும் பாதுகாப்பும் முக்கியம்...'' என்று அவர் கூறினார்.