ம.பி. போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது சரமாரி தாக்குதல்: பெண் உள்பட 9 பேர் கைது
|சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஒரு பெண் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
சிவபுரி, -
மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட டோரியா குர்து கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கரைரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக இளைஞரின் தரப்பினர் சிலர் நேற்று முன்தினம் அந்த போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.சர்மா, வாக்குமூலம் வாங்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர் அந்த நிகழ்வுகளை செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். இதை சப்-இன்ஸ்பெக்டர் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த குழுவினர் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஒரு பெண் உள்பட 9 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் சிவபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.