லாரி மீது மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் சாவு
|உப்பள்ளி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். அவர்கள், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்து நடந்தது.
உப்பள்ளி;
லாரி மீது மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ெமகபூப் தாபா அருகே 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் நேற்றுமுன்தினம் இரவு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள், முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்தி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக எதிரே சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.
அவர்களை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
தொடர்ந்து மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
3 தொழிலாளிகள் சாவு
அதில் விபத்தில் பலியானவர்கள், உப்பள்ளி டவுன் செட்டில்மென்ட் பகுதி கங்காதர் நகர் பகுதியை சேர்ந்த தேவேந்திரப்பா பஜந்திரி, மஞ்சுநாத் வெங்கடேஷ் காரகட்டி, வினோத் காரகட்டி. தொழிலாளிகளான இவர்கள், உப்பள்ளி தரியாலாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் வேலை முடிந்து மோட்டார் சைக்கிள்களில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.
படுகாயமடைந்தவரின் பெயர் தெரியவில்லை. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உப்பள்ளி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.