மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
|கோலாரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.
கோலார் தங்கவயல்:
கோலாரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.
போலீசார் ரோந்து
கோலார்(மாவட்டம்) நகர போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களையும் கேட்டனர்.
உடனே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் 2 பேரும் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுனில் உள்ள ரகமத் நகரை சேர்ந்தவர்கள் என்பதும், தற்போது கோலாரில் உள்ள ஷாஹிஷா நகரில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கோலார் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலீசார் ரூ.11 லட்சம் மதிப்பிலான 21 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் 2 பேரின் பெயர், விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.