சபாநாயகர் யு.டி.காதருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
|சபாநாயகர் யு.டி.காதருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்படி சட்டசபை செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம் அளித்தனர்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபையில் நேற்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. அதாவது எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சட்டவிரோதமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதற்காக கர்நாடக அரசு மன்னிப்பு கேட்குமாறு கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஆவணங்களை கிழித்து சபாநாயகர் மீது எறிந்தனர். இதையடுத்து பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள், சபாநாயகர் யு.டி.காதருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளன. இதுகுறித்து சட்டசபை செயலாளரிடம் அவர்கள் ஒரு கடிதம் வழங்கியுள்ளனர். அதில், 'சட்டசபையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட யு.டி.காதர், சபையின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அதனால் அந்த பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். சட்டசபையின் விதிகள்படி நாங்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.