< Back
தேசிய செய்திகள்
குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் தாயை கொன்று உடல் எரிப்பு; நாடகமாடிய வாலிபர் கைது
தேசிய செய்திகள்

குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் தாயை கொன்று உடல் எரிப்பு; நாடகமாடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
22 July 2022 8:14 PM IST

மூடிகெரே அருகே, குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் தாயை கொன்று உடலை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தீவிபத்தில் இறந்துவிட்டதாக நாடகமாடியது அம்பலமானது.

சிக்கமகளூரு;

குடிப்பதற்கு பணம் கொடுக்காததால்...

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹச்சதமனே கிராமத்தை சோ்ந்தவர் லதா (வயது 45). இவரது மகன் பசவராஜ் (22). லதா, கடந்த 10 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இதில் லதா, கூலி வேலை செய்து மகனை வளர்த்து வந்தார். இதற்கிடையே பசவராஜூக்கு, அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளது.

இதனால் பசவராஜ் மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தாய் லதாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் குடிப்பதற்கு பணம் கொடுக்குமாறும், பெண் பார்த்து திருமணம் செய்துவைக்கும்படியும் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வழக்கம்போல் பசவராஜ் குடித்துவிட்டு வந்து தன் தாயிடம் குடிப்பதற்கு பணம் தருமாறு சண்டை போட்டுள்ளார். ஆனால் லதா பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

கொன்று உடல் எரிப்பு

இதனால் ஆத்திரமடைந்த பசவராஜ், லதாவை வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் லதா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பசவராஜ், லதா மீது டீசலை ஊற்றி பழைய துணிகளை போட்டு தீவைத்து எரித்துள்ளார்.

இதையடுத்து அவர் கொலை செய்ததை மறைக்க அக்கம் பக்கத்தினரிடம், தனது தாய் மீது எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி தவறி விழுந்ததில் உடல் மீது தீப்பற்றி எரிந்து இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய கிராமத்தினர், 18 பேர் சேர்ந்து லதாவின் இறுதி சடங்குகளை செய்து வைத்தனர்.

ஆனால் பசவராஜ் மீது சந்தேகமடைந்த லதாவின் உறவினர் ஒருவர், ஆல்தூர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் லதாவின் இறப்பிற்கு அவரது மகன் பசவராஜ் தான் காரணம் என்றும், எனவே அவரிடம் விசாரணை நடத்தும்படி கூறியிருந்தார். அதன்போில் போலீசார் பசவராஜை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது தாய் குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் அடித்து கொன்று தீவைத்து எரித்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை,போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்