காணாமல் போன மகனை 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பார்த்த தாய் ...!! காத்திருந்த பேரதிர்ச்சி
|பிங்குவை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.11 லட்சம் தர வேண்டும் என அவர் சார்ந்த, மத அமைப்பு கேட்கிறது என பிங்குவின் தந்தை குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் வசித்து வரும் தம்பதி ரதிபால் சிங் மற்றும் பானுமதி. இவர்களுடைய மகன் பிங்கு. 22 ஆண்டுகளுக்கு முன் 11 வயது சிறுவனாக இருந்த பிங்கு சிறுவர்களுடன் தெருவில் விளையாடி கொண்டு இருந்துள்ளான். இதனால், அவனுடைய தாய் பானுமதி அவனை திட்டியிருக்கிறார்.
இதில், கோபம் அடைந்த பிங்கு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். 22 ஆண்டுகளாக திரும்பி வரவேயில்லை. வருடங்கள் சென்றன. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் கராவுலி கிராமத்தில், பாரம்பரிய இசை கருவியான சாரங்கி என்ற 3 கம்பிகளால் கட்டப்பட்ட இசை கருவியை இசைத்தபடி நபர் ஒருவர் பாட்டு பாடியபடியே தெருவில் வந்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை. வீட்டை விட்டு ஓடிப்போன பிங்கு தான் திரும்பி வந்திருக்கிறார். காவி ஆடைகளை அணிந்தபடி பிங்கு ஒரு முழு துறவியாக காணப்பட்டார்.
பிங்குவை அடையாளம் கண்டு கொண்ட அந்த ஊர்க்காரர்கள் அது, காணாமல் போன பிங்கு தான் என்று உறுதிப்படுத்தினர். உடனடியாக அவர்கள் பிங்குவின் பெற்றோரை தொடர்பு கொண்டனர். அவர்களும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர். சிறுவனாக இருந்தபோது, உடலில் இருந்த தழும்பு ஒன்றை வைத்து தங்களுடைய மகனை பெற்றோர் அடையாளம் கண்டு கொண்டனர்.
அவரை பார்த்ததும் தாய் பானுமதி கண்ணீர் வடித்துள்ளார். குடும்பத்துடன் மகன் ஒன்றாக இணைந்து விடுவார் என கிராமத்தினர் எதிர்பார்த்தனர். எனினும், இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரம் ஓரத்தில் அமர்ந்து பிங்கு பாட்டு பாட தொடங்கினார். வளம் நிறைந்த அரசாட்சியை விட்டு விட்டு, பார்தரி என்ற அரசன் துறவியாக மாறிய விசயங்களை அடிப்படையாக கொண்ட நாட்டுப்புற பாடல் ஒன்றை பாடினார்.
தொடர்ந்து, தன்னுடைய தாயிடம் யாசகம் கேட்டிருக்கிறார். இதனை கண்டதும் கூடியிருந்த ஊர்க்காரர்களும் அழுது விட்டனர். பிங்குவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அவர் கேட்கவில்லை. பிங்கு, அவருடைய தாயாரிடம் யாசகம் கேட்டு பெற்று விட்டு, கிராமத்தில் இருந்து மீண்டும் வெளியேறினார்.
பிங்குவை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.11 லட்சம் தர வேண்டும் என அவர் சார்ந்த, மத அமைப்பு கேட்கிறது என பிங்குவின் தந்தை குற்றச்சாட்டாக கூறியுள்ளார். சட்டை பையில் ரூ.11 கூட இல்லை. ரூ.11 லட்சம் பணத்திற்கு எங்கு செல்வேன்? என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.