கோபித்து சென்ற மனைவியை அழைத்துவர சென்றபோது தகராறு; மாமியாருக்கு சரமாரி கத்திக்குத்து - கோலாரை சேர்ந்த வாலிபர் கைது
|கோபித்து சென்ற மனைவியை அழைத்து வருவதற்கு சென்றபோது ஏற்பட்ட தகராறில் மாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய கோலார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
காதல் திருமணம்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர் பெங்களூருவில் பவுன்சர் ஆக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும், வர்ஷித்தா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பழக தொடங்கிய சில நாட்களில் காதலை வெளிப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதுகுறித்து பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, மனோஜ் மற்றும் வர்ஷித்தா காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு, தான் மனோஜ் மதுஅருந்தும் பழக்கம் கொண்டவர் என்பது வர்ஷித்தாவுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக மீண்டும் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ஏற்பட்ட தகராறின்போது, கணவருடன் கோபித்து கொண்டு, வர்ஷித்தா தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
மாமியாருக்கு கத்திக்குத்து
இதுகுறித்து அறிந்ததும், தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக மனோஜ், பெல்லந்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர், தனது மனைவியை தன்னுடன் வருமாறு கூறினார்.
ஆனால் அதற்கு வர்ஷித்தா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ், மனைவி மற்றும் மாமியார் கீதா ஆகியோருடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாமியார் கீதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீதா சரிந்து விழுந்தார். மேலும் உயிருக்கு போராடினார்.
கைது
இதையடுத்து மனோஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பெல்லந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கீதாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை மனோஜ் அழைப்பதற்கு வந்ததும், அப்போது ஏற்பட்ட தகராறில் மனோஜ் மாமியாரை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மனோஜை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.