மகன்-மகளை ஏரியில் வீசி கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன? - போலீஸ் விசாரணை
|தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா மிட்டேகேரி கிராமத்தில் உள்ள ஏரியில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக பாகேபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பினனர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் ஏரியில் கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் அவர்கள் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது போலீசாருக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தவர்கள் சிந்தாமணி தாலுகா யாகவகோட்டையை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவரின் மனைவி ராதா, அவர்களின் 4 வயது மகள் பூர்விதா மற்றும் 1½ வயது மகன் என்பது தெரியவந்தது. மேலும் ராதா தனது மகன் மற்றும் மகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஆனால் ராதா என்ன காரணத்திற்காக மகன்-மகளை கொன்று தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பாகேபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் கணவர் மல்லிகார்ஜுனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.