4 வயது பெண் குழந்தையை கொன்ற தாய் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
|போலீசார் நடத்திய விசாரணையின்போது, குழந்தையை கொன்றது குறித்து அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா(வயது 35). இந்த தம்பதிக்கு கடந்த 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசும், ரம்யாவும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் ஆவார்கள். தற்போது நார்வே நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வெங்கடேஷ் பணியாற்றி வருகிறார்.
ரம்யா முதலில் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றினார். பின்னர் குழந்தைகளை வளர்ப்பதற்காக வேலையைவிட்டு நின்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தனது 4 வயது பெண் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து ரம்யா கொலை செய்தார்.
தொடர்ந்து, தனது மைத்துனரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, குழந்தையை கொன்றுவிட்டதாக ரம்யா திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து அவர் இதுபற்றி சுப்பிரமணியபுரா போலீஸ் நிலையத்தில் ரம்யா மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, குழந்தையை கொன்றது குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
அதாவது வெங்கடேஷ், ரம்யா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதில், ஒரு குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதால், தற்போது பள்ளிக்கு அந்த குழந்தை சென்று வருகிறது. ஆனால் மற்றொரு குழந்தையான பிரதிகா வாய் பேச முடியாமலும், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த குழந்தையை வளர்க்க ரம்யா மிகவும் சிரமப்பட்டுள்ளார். அத்துடன் குழந்தைக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் மனம் உடைந்த ரம்யா நேற்று முன்தினம் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. அதையடுத்து கைதான ரம்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.