< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர் - கங்கனா ரணாவத்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர் - கங்கனா ரணாவத்

தினத்தந்தி
|
13 Aug 2024 6:03 AM GMT

தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க். பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே (செபி) விசாரிக்கட்டும் என்று கூறியது.

இதையடுத்து, ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். செபியின் நேர்மை சமரசத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக பாஜக எம்பி கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது.

நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.

ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்." என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் செய்திகள்