உள்நாட்டிலேயே கட்டப்பட்ட புதிய போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
|உள்நாட்டிலேயே கட்டப்பட்ட புதிய போர்க்கப்பல் நேற்று கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய கடற்படைக்கு 4 நாசகாரி போர்க்கப்பல்களை கட்டுவதற்கு மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி ஒப்பந்தம் போடப்பட்டது.
'திட்டம் 15பி' என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் முதல் கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 'ஒய் 12705' (ஐ.என்.எஸ். மோர்முகாவ்) எனப்படும் 2-வது போர்க்கப்பல் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கப்பலின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
கடற்படையிடம் ஒப்படைப்பு
இந்த சோதனைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை ராணுவ அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்ைகயில், 'மசாகான் கப்பல் கட்டுமான தளத்தில் 15பி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த 2-வது நாசகாரி கப்பலான 'ஒய் 12705' (ஐ.என்.எஸ். மோர்முகாவ்) கடற்படையிடம் வழங்கப்பட்டு உள்ளது' என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டது. முழுமையான கொள்ளளவில் 7,400 டன் எடை கொண்ட இந்த கப்பல் 30 'நாட்' வேகத்தில் செல்லக்கூடியது ஆகும்.
உள்நாட்டு ஆயுதங்கள்
இந்த கப்பல் தயாரிப்பில் உள்நாட்டு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன், அதில் பயன்படுத்தப்படும் ஆயதங்களும் பெரும்பாலும் உள்நாட்டிேலயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.
அந்தவகையில் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர வகையான ஏவுகணைகள், தரையில் இருந்து தரை இலக்கை தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள் என சுமார் 75 சதவீத ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
தற்சார்பு இந்தியா
இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தற்சார்பு இந்தியா நோக்கில் மத்திய அரசும், கடற்படையும் அளித்து வரும் உத்வேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, மோர்முகாவ் கப்பல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கப்பலின் வரவால் இந்திய பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.