'65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்' - அஜித் பவார்
|நாட்டில் பெரும்பாலான மக்கள் மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக அஜித் பவார் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் இன்று புனேவில் உள்ள பராமதி பகுதியில் இருந்து தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-
"நாட்டில் உள்ள 65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். மராட்டிய மாநிலத்தை ஆளும் 'மகாயுதி' கூட்டணி அரசானது, மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக போராடும்.
நாம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க விரும்புகிறோம். எனவே நம்மைப் போன்ற சிந்தனைப் போக்கைக் கொண்ட எம்.பி.யைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எனது ஆதரவாளர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து அடுத்த சில மாதங்கள் மக்களவை தேர்தலுக்காக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்."
இவ்வாறு அஜித் பவார் தெரிவித்தார்.