50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர் - மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
|2014-ம் ஆண்டு (காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பா.ஐ.க. ஆட்சியமைத்தபோது) இந்த எண்ணிக்கை வெறும் 14 கோடியாக இருந்தது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய நிதிச் சேர்க்கை முயற்சிகளில் ஒன்றான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் (பிஎம்ஜேடிஒய்) ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, மத்திய நிதி மந்திரி சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஜன்தன் யோஜனா இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியது, 50 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 55.5 சதவீத வங்கிக் கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன. 67 சதவீதம் கிராமப்புற/அரை நகர்ப்புற பகுதிகளில் திறக்கப்பட்டது.
ஜன்தன் யோஜனா தலைமையிலான தலையீடுகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவை நாட்டில் நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் முறையான வங்கி அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை மார்ச் 2015 இல் 14.72 கோடியிலிருந்து 3.4 மடங்கு அதிகரித்து, ஆகஸ்ட் 16, 2023 நிலவரப்படி 50.09 கோடியாக அதிகரித்துள்ளது.
மொத்த வைப்புத் தொகையும் மார்ச் 2015 நிலவரப்படி ரூ.15,670 கோடியிலிருந்து, ஆகஸ்ட் 2023 வரை ரூ.2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஜன்தன் கணக்குகளில் உள்ள சராசரி வைப்புத்தொகை மார்ச் 2015 நிலவரப்படி ரூ.1,065ல் இருந்து 3.8 மடங்கு அதிகரித்து ஆகஸ்ட் 2023ல் ரூ.4,063 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 34 கோடி ரூபே கார்டுகள் இந்தக் கணக்குகளுக்கு கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன, இது ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகையையும் வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் பூஜ்ஜிய இருப்பு கணக்குகள் மார்ச் 2015 இல் 58 சதவீதத்தில் இருந்து ஆகஸ்ட் 2023 நிலவரப்படி மொத்த கணக்குகளில் 8 சதவீதமாக குறைந்துள்ளது" என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் கூறுகையில், "ஜன்தன் 'ஆதார்' மொபைல் (ஜேஏஎம்) கட்டமைப்பானது சாமானியர்களின் கணக்குகளில் அரசுப் பலன்களை தடையின்றி வெற்றிகரமாக மாற்றுவதற்கு உதவியுள்ளது.
PMJDY கணக்குகள் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) போன்ற மக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் முக்கிய அம்சமாக மாறியுள்ளன. மேலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக பின்தங்கியவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன" என்று அவர் கூறினார்