இந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள் - ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை
|இந்தியாவில் 40 சதவீத முதியவர்கள் ஏழ்மையில் தவித்து வருவதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள முதியவர்களில் ஐந்தில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் அதாவது 40 சதவீத்துக்கும் அதிகமான முதியவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என புதிய ஐ.நா. அறிக்கை கூறுகிறது. அவர்களின் வேலை, ஓய்வூதியம் மற்றும் வருமான நிலை ஆகியவற்றின் பகுப்பாய்வுபடி 18.7 சதவீத முதியவர்களுக்கு வருமானம் இல்லை என்பதை காட்டுகிறது.
இந்த விகிதம் 17 மாநிலங்களில் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது. உத்தரகாண்டில் 19.3 சதவீதம் முதல் லட்சத்தீவில் 42.4 சதவீதம் வரை உள்ளது. வயதானவர்களிடையே இந்த அளவு வறுமை அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதார நிலையை பாதிக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும் இந்தியாவில் வயதான பெண்களுக்கு அதிக ஆயுட்காலம் இருப்பதாக கூறி உள்ளது. இதனால் வயதான பெண்கள் விதவைகளாகவும், தனியாகவும், சொந்தமாக வருமானம் இல்லாமலும் குடும்பத்தையே முழுமையாக சார்ந்து வாழும் நிலையில் உள்ளனர். இதனால் இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வு கவலை அளிப்பதாக அறிக்கை கூறி உள்ளது.