< Back
தேசிய செய்திகள்
காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
17 Jan 2023 11:05 AM IST

தேசிய, கலாசார ஒற்றுமை வலுப்பட காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த வேண்டும் என கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


புதுடெல்லி,


டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் கட்சி சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, நேற்று மதியம் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரை பேரணி நடைபெற்றது.

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் வர இருக்கிற சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பற்றிய பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட கூடும் என கூறப்படுகிறது.

இந்த தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, பா.ஜ.க. தலைமையகத்தில் கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநில அமைப்பு தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் செயலாளர்கள் அடங்கிய கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, டெல்லியில் பட்டேல் சவுக் பகுதியில் இருந்து நாடாளுமன்ற சாலை வரையிலான மெகா பேரணியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.

அவரை சாலையின் இரு புறங்களிலும் இருந்து மக்களும், கட்சி தொண்டர்களும் மலர்தூவி உற்சாகமுடன் வரவேற்றனர். அவர் வாகனத்தில் நின்றபடியே பயணம் செய்து, மக்களை நோக்கி கையசைத்தபடியே சென்றார்.

இதன்பின்பு, புதுடெல்லி நகராட்சி கவுன்சில் கூட்ட அரங்கிற்கு சென்ற அவரை பா.ஜ.க. தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர்.

இந்த 2 நாள் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் அரசியல் அல்லாத சில விசயங்களிலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசம் ஓரணியில் பிணைக்கப்படும் வகையில், காசி-தமிழ் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை கட்சி தொண்டர்கள் அதிகளவில் நடத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.

இதனால், அனைத்து மாநிலங்களும் தங்களுடைய கலாசாரம், நாகரிகம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வதுடன், கலாசார ரீதியில் நாடானது ஒற்றுமைக்கான ஓர் நூலில் ஒன்றிணையும் என கூறியுள்ளார்.

அவர் கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான மொழிகள் மற்றும் கலாசார பரிமாற்றம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ந்தேதி தொடங்கி வைத்து பேசினார். பனாரஸ் இந்து பல்கலை கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவு பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒரு மாத காலத்திற்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பொதுமக்களுடன் உரையாடி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றும் மக்களுடன் தொடர்ந்து, தொடர்பில் இருக்க கூடிய மன் கி பாத் போன்ற பிற நிகழ்ச்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்