சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12-19க்கு இடையில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்
|நிலவை ஆராயும் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை12 மற்றும் 19கு இடையில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட உள்ளது.
கோட்டயம்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் அடுத்த மாதம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் (சந்திரயான்-3), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எம்.கே. III என அழைக்கப்படும் இந்தியாவின் கனமான ஏவு வாகனமான மார்க்-III இல் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது.
சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும், இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லேண்டர்-ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலம் அதன் சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.
இந்த நிலையில், விண்கலம் ஜூலை 12 மற்றும் 19க்கு இடையில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நத் தெரிவித்துள்ளார். கேரளாவில் கல்லூரி ஒன்றில் விண்வெளி கண்காட்சியை தொடங்கிவைத்த அவர், சந்திரயான் 3 திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அனைத்து சோதனைகளும் சுமூகமாக நடந்தால், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இந்தியாவின் லட்சிய திட்டமான சந்திரயான்-3 ஜூலை 12 முதல் 19க்கு இடையில் விண்ணில் ஏவப்படும்.
சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும். அதே நேரத்தில், இந்த ஏவுதலுக்கு, எல்விஎம்-3 என்ற ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. அதனை இணைக்கும் பணி நடக்கிறது. அதன் அனைத்து பாகங்களும் ஸ்ரீஹரிகோட்டாவை அடைந்து விட்டது.
ராக்கெட்டை இணைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், ராக்கெட்டுடன் சந்திரயான் -3ஐ ஒருங்கிணைக்கும் பணி நடைபெறும். அதுவும் ஜூன் கடைசி வாரத்தில் நடைபெறும். இதனை தொடர்ந்துது பல சோதனைகள் நடத்தப்படும்.
ராக்கெட் ஏவுதலின் போது எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில், கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதிக எரிபொருள் சேர்க்கப்பட்டுள்ளது, தரையிறங்கும் லேண்டரின் கால்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிக ஆற்றல் உற்பத்திக்காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றொரு கூடுதல் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.