மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூலில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி உத்தர பிரதேசம் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்
|உத்தர பிரதேச மாநிலம் ஏப்ரல் மாதத்தில் ரூ.12,290 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்து, 19% வளர்ச்சியுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புதுடெல்லி,
ஏப்ரல் மாத மொத்த ஜி.எஸ்.டி. வரியாக 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும் இது புதிய உச்சம் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த ஜி.எஸ்.டி. வரி வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 12.4% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் அடிப்படையில், மராட்டிய மாநிலம் ரூ.37,671 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூலில் கடந்த ஆண்டை விட மராட்டிய மாநிலம் இந்த ஆண்டு 13% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ரூ.15,978 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்து கர்நாடக மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூலில் கர்நாடக மாநிலம் இந்த ஆண்டு 9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதையடுத்து குஜராத் மாநிலம் ஏப்ரல் மாதத்தில் ரூ.13,301 ஜி.எஸ்.டி. வசூல் செய்து 3-வது இடத்தில் உள்ளது. ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூலில் குஜராத் மாநிலம் இந்த ஆண்டு 13% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் ஏப்ரல் மாதத்தில் ரூ.12,290 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்து, 19% வளர்ச்சியுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சம்யம் தமிழ்நாடு, ஏப்ரல் மாதத்தில் ரூ.12,210 ஜி.எஸ்.டி. வசூல் செய்து 6% வளர்ச்சியுடன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வழக்கமாக மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூலில் மக்கள் தொகையில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் அதிகமாக இருந்து வந்த நிலையில், இந்த முறை தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி உத்தர பிரதேசம் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11,559 கோடியாகவும், உத்தர பிரதேசத்தின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.10,320 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.