நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்
|டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடர், ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும். இதில், நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.
இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார். இதனை தொடர்ந்து, அதன் மீது விவாதம் நடைபெறும். எனினும், இந்த கூட்டத்தொடரில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தின் முக்கிய கமிட்டி அறையில் இன்று காலை 11 மணியளவில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். இதில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மக்களவை துணை தலைவர் கவுரவ் கோகாய், மாநிலங்களவை துணை தலைவர் பிரமோத் திவாரி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
இந்த சூழலில், டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கியுள்ளது. எனினும், இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இன்றைய தினம் மேற்கு வங்காளத்தில் வீரமரணம்
அடைந்தவர்களின் தினம் என்பதற்காக அதனை கடைப்பிடிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இதுபற்றி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிக் ஓ பிரையன் முன்பே தகவல் தெரிவித்து விட்டார்.