< Back
தேசிய செய்திகள்
சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் 12-ந் தேதி தொடங்குகிறது; கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
தேசிய செய்திகள்

சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் 12-ந் தேதி தொடங்குகிறது; கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

தினத்தந்தி
|
26 Aug 2022 1:38 AM IST

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கும் என்று கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

மந்திரிசபை கூட்டம்

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் சித்தாப்புரா, அம்பாரு, அஜ்ரி மற்றும் கொட்லாடி கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தும் திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. சன்னராயப்பட்டணா தாலுகாவில் 2 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப ரூ.25 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டம் ஹொன்னாவரா ஏரியில் இருந்து சில ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 27 ஏரிகள் மற்றும் 18 குளங்களில் நீர் நிரப்பப்படும்.

நீரேற்று திட்டம்

விஜயாப்புரா மாவட்டம் இண்டி மற்றும் விஜயாப்புரா தாலுகாக்களில் 28 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பிற்கு பாசன வசதி ஏற்படுத்த ரூ.2 ஆயிரத்து 638 கோடி மதிப்பீட்டிலான ஹொர்தி-ரேவண்ண சித்தேஸ்வரா நீரேற்று திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகளை மூன்று கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்ய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திருத்தம் மூலம் புதிதாக 8 புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும். புதிய பல்கலைக்கழகங்களில் சாம்ராஜ்நகர் பல்கலைக்கழகத்தில் 18 கல்லூரிகளும், ஹாசன் பல்கலைக்கழகத்தில் 36 கல்லூரிகளும், ஹாவேரி பல்கலைக்கழகத்தில் 40 கல்லூரிகளும், பீதர் பல்கலைக்கழகத்தில் 140 கல்லூரிகளும், குடகு பல்கலைக்கழகத்தில் 24 கல்லூரிகளும், கொப்பல் பல்கலைக்கழகத்தில் 40 கல்லூரிகளும் மற்றும் பாகல்கோட்டை பல்கலைக்கழகத்தில் 71 கல்லூரிகளும் இடம் பெறும்.

கலாசிபாளையா மார்க்கெட்

அத்துடன் மண்டியா பல்கலைக்கழகத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் இடம் பெறும். மண்டியாவை தவிர மற்ற 7 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கு தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக தலா ரூ.2 கோடி வீதம் ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பல்கலைக்கழகங்கள் குறைந்த இடம் மற்றும் குறைந்த ஊழியர்களுடன் செயல்படும்.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். லோக்அயுக்தாவில் ஓய்வு பெற்ற 7 அரசு வக்கீல்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. பெங்களூரு சிங்கேனஹள்ளி அருகே 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுகிறது. கலாசிபாளையா மார்க்கெட் அங்கு மாற்றப்படும்.

ஆஸ்பத்திரி

ஒயிட்பீல்டு ரெயில் நிலையம் அருகே ரூ.27 கோடியில் மேம்பாலம் கட்டப்படும். சிவமொக்கா, பத்ராவதியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. பெங்களூரு பந்தரபாளையாவில் ரூ.32 கோடியில் 150 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்படும். குந்தாப்புராவில் குடிநீர் திட்டத்திற்கு ரூ.165 கோடி ஒதுக்கப்படுகிறது. ரூ.19 கோடி செலவில் போலீஸ் துறைக்கு தேவையான வாகனங்கள் வாங்கப்படும். கர்நாடகத்தில் புதிதாக 4,244 அங்கன்வாடி மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் நடைபெறும். ஆனால் இந்த முறை ஒரு மாதம் தாமதமாக செப்டம்பரில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்