< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்  24 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 24 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

தினத்தந்தி
|
17 July 2022 2:17 AM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

24 மசோதாக்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற முயன்று வருகிறது. இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டங்களும் நடைபெறுகின்றன.

இதற்கிடையே மழைக்கால கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு தயாரித்து உள்ளது. அதன்படி இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வனப்பாதுகாப்பு மசோதா

இதில் முக்கியமாக தொல்லியல் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் பகுதிகள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

வனப்பாதுகாப்பு சட்டத்தில் உள்ளது போன்ற அமலாக்க அதிகாரங்கள் தொல்லியல் துறைக்கு வழங்க இந்த மசோதா வகை செய்யும்.

இதைப்போல குடும்ப கோர்ட்டு திருத்த மசோதாவை சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ முதல் நாளிலேயே மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் வினியோக முறைகள் (சட்டவிரோத செயல்களுக்கு தடை) திருத்த மசோதாவை மாநிலங்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தாக்கல் செய்ய உள்ளார்.

இதைத்தவிர வனப்பாதுகாப்பு திருத்த மசோதா, ஆள்கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, கண்டோன்மென்ட், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, திவால் குறியீடு திருத்த மசோதா போன்றவற்றையும் இந்த தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியல்

காபி (ஊக்குவித்தல் மற்றும் மேம்பாடு) மசோதா, புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) (திருத்தம்) மசோதா, கிடங்கு (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (திருத்தம்) மசோதா மற்றும் போட்டி (திருத்தம்) போன்ற மசோதாக்களும் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.

மேலும் கலாஷேத்ரா அறக்கட்டளை திருத்தம், தேசிய பல் மருத்துவ கமிஷன் மசோதா, தேசிய நர்சிங் மசோதா, ஐ.ஐ.எம். திருத்த மசோதா, மத்திய பல்கலைக்கழக திருத்த மசோதா போன்ற மசோதாக்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

இதற்கிடையே தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கார் மாநிலங்களின் பழங்குடியினர் பட்டியலை திருத்துவதற்கான 2 மசோதாக்கள் உள்ளிட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று நடத்தினார். இதில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அவைத்தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'அக்னிபத், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். மேலும் இந்த பிரச்சினைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் வழங்குமாறும் வலியுறுத்தி உள்ளோம்' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்