உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி - கடலூரை சேர்ந்த பெண் கைது
|புதுச்சேரியில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணமோசடியில் ஈடுபட்ட கடலூரை சேர்ந்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 13-ந்தேதி, உல்லாசமாக இருக்க பெண் தேவையா? என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது மறுமுனையில் பேசிய பெண், சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பி அதில் ஒருவரை தேர்வு செய்ய கூறியுள்ளார். அதில் ஒருவரை விக்னேஷ் தேர்வு செய்யவே, அதற்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்றும், அதில் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை 'ஜிபே' மூலம் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, விக்னேஷ் பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பின் அந்த பெண் முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு காத்திருக்கும்படி கூறியுள்ளார். அங்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் குறிப்பிட்ட பெண் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்னேஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷை ஏமாற்றிய பெண் கடலூரை சேர்ந்த காயத்ரி (35 வயது) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காயத்ரியிடம் மேற்கொண்ட விசாரணையில், இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றியதும், கடந்த 6 மாதங்களில் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.