டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவுக்கு எதிராக பணமோசடி வழக்கு; அமலாக்க துறை நடவடிக்கை
|டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்க துறை பணமோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார்.
இதில், 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.
இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனை மற்றும் வழக்குகளால் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
மணீஷ் சிசோடியாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. எனினும், குஜராத்தில் நடைபெற இருக்கிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா இருவரும் குஜராத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இந்த பயணத்தில் பவ்நகரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிசோடியா, நான் சி.பி.ஐ. அமைப்பை பார்த்து பயப்படும் நபர் அல்ல என்று தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என இன்று பேசியுள்ளார்.
இதன்பின்னர் கூட்டத்தினரிடையே கெஜ்ரிவால் பேசும்போது, அடுத்த 10 நாட்களில், மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்யும் என எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் தற்போது, அடுத்த 2 முதல் 3 நாட்களிலேயே அவர் கைது செய்யப்படுவார் என நான் உணர்கிறேன் என்று பேசியுள்ளார்.
சி.பி.ஐ. அமைப்பு பற்றி சிசோடியா பேசிய நிலையில், இந்த நடவடிக்கை இருக்கும் என்ற அடிப்படையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள சிசோடியாவின் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் கடந்த 19-ந்தேதி சி.பி.ஐ. அமைப்பு அதிரடி சோதனை நடத்தி இருந்தது.
இந்த நிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மீது, 2021-22-ம் ஆண்டுக்கான டெல்லி ஆயத்தீர்வை கொள்கையை அமல்படுத்தியதில் பணமோசடி நடந்துள்ளது என கூறி அமலாக்க துறை அதிகாரிகள் சிசோடியாவுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டு உள்ளது கவனிக்கத்தக்கது.