மாணவ-மாணவிகளிடம் ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு தர்ம-அடி
|கோலார் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளிடம் ஆபாச படம் காட்டிய ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அந்த ஆசிரியர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
கோலார் தங்கவயல்:
கோலார் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளிடம் ஆபாச படம் காட்டிய ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அந்த ஆசிரியர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
ஆபாச படங்களை காட்டினார்
கோலார் மாவட்டம் கோலார் தாலுகா நரசாபுரா கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.
அப்போது முதல் இரவு என்றால் என்ன? என்று மாணவ-மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பிய அவர், தாம்பத்தியம் குறித்து பேசியுள்ளார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு ஆபாச படங்களையும் அவர் காண்பித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவ-மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், பொதுமக்களும் பள்ளிக்கூடத்திற்கு வந்து ஆசிரியர் பிரகாசிற்கு தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் ஆசிரியரின் செயல் குறித்து கோலார் தாலுகா வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யாவிடம் புகார் அளித்தனர்.
பணி இடைநீக்கம்
அதன்பேரில் பள்ளிக்கூடத்திற்கு வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யா வந்து மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது வகுப்பறையில் ஆசிரியர் பிரகாசின் செயல்குறித்து மாணவ-மாணவிகள் விவரித்தனர். பின்னர் அவர் இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனருக்கு தவவல் கொடுத்தார். அவரின் அனுமதியின் பேரில் வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யா, ஆசிரியர் பிரகாசை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.