< Back
தேசிய செய்திகள்
Mohan Charan Majhi
தேசிய செய்திகள்

ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்பு

தினத்தந்தி
|
12 Jun 2024 12:10 PM GMT

ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.

புவனேஸ்வர்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் கண்டன. இதில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை அக்கட்சி பெற்றது. ஒடிசாவில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். மத்திய மந்திரிகள் தலைமையில் ஒடிசா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்குமாறு மோகன் சரண் மாஜிக்கு ஒடிசா கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதன்படி, ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். மோகன் சரண் மாஜிக்கு கவர்னர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவரை தொடர்ந்து, ஒடிசா துணை முதல்-மந்திரிகளாக கே.வி.சிங் தியோவும், பிரவாதி பரிதாவும் பதவியேற்றனர்.

புவனேஸ்வரின் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாய் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முதல்- மந்திரியாக பதவியேற்ற மோகன் சரண் மாஜிக்கு பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்