< Back
தேசிய செய்திகள்
மோடியே பிரதமராக நீடிப்பார்.. கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி
தேசிய செய்திகள்

மோடியே பிரதமராக நீடிப்பார்.. கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி

தினத்தந்தி
|
11 May 2024 7:30 PM IST

பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

புதுடெல்லி,

மதுபானகொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசுகையில்,

"பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி இருக்க மோடி 75 வயதை அடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது பாஜக? அமித்ஷாவைப் பிரதமர் ஆக்க ஓட்டு கேட்கிறார்களா? இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?" பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றால் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?" என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை மந்திரி அமித்ஷா, கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து கூறியதாவது; "

"நாட்டில் அனைத்து பகுதி மக்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நிற்கின்றனர். பா.ஜனதா 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்பார் என 'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்கு நன்கு தெரியும். இதனால்தான் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

75 வயதை பூர்த்தி செய்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பா.ஜனதாவில் இல்லை. ஆகவே பா.ஜனதா வென்றால் மோடியே அடுத்த 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிப்பார். 'இந்தியா' கூட்டணிக்கு நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. பொய் பரப்பி அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்