மோடி அலை, சுனாமியாக மாறிவிட்டது - யோகி ஆதித்யநாத்
|4-வது கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி அலை, சுனாமியாக மாறி விட்டதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஜான்பூர்,
நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மாநிலத்தின் ஹைதர்கார் தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் ரஜ்ரானி ராவத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடினார். இது தொடர்பாக பேசிய அவர், "காங்கிரசும், சமாஜ்வாடியும் ஊழலில் மோசமான சாதனையை படைத்திருக்கின்றன. ஊழலின் ஆபத்தான உச்சங்களை கொண்டிருக்கின்றன. ராமர் கோவில் கட்டுவதால் எந்த பயனும் இல்லை என இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்து மதத்தை அவமதிப்பது அவர்களது கொள்கை.
எனவே இந்த தேர்தல் ராமரின் பக்தர்களுக்கும், ராமரின் துரோகிகளுக்கும் இடையேயானது. அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம், நலத்திட்டங்களின் பலன் சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் சென்றடைதல் போன்றவற்றை பிரதமர் மோடி உறுதி செய்திருக்கிறார். எனவே நமது ராமபிரான் கூட தனது சிறந்த பக்தரான மோடி மீண்டும் ஒருமுறை நாட்டை வழிநடத்த விரும்புகிறார்.
3-வது கட்ட தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி அலை தென்பட்டது. இது மேலும் அதிகரித்து 4-வது கட்ட வாக்குப்பதிவுக்கு பின் சுனாமியாக மாறி இருக்கிறது. பா.ஜனதாவுக்கு 400 இடங்கள் என்ற கோஷம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. இன்றைய புதிய இந்தியா, உள்நாட்டிலும், உலக அளவிலும் நிகழும் மாற்றங்களுக்கு சாட்சியாக உள்ளது. நமது சர்வதேச நிலை உயர்ந்துள்ளது, எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ச்சி திட்டங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டுமே 80 கோடி பேருக்கு இலவச ரேஷன், 12 கோடி விவசாயிகளுக்கு கிசான் நிதி என ஏராளமான திட்டங்கள் கிடைத்து உள்ளன. உஜ்வாலா திட்டம் ஹர்கர் நல் யோஜனா போன்றவை அத்தியாவசிய வசதிகளை வழங்கின. வீட்டு வசதி, கழிவறை வசதி போன்றவை 4 கோடி பேருக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது" என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.