'இந்தியா'வுக்கு பதிலாக பாரதம்' என்ற பெயரில் பங்கேற்ற பிரதமர் மோடி: பெயர் மாற்றம் உறுதியாகிறதா?
|இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்தியாவுக்கு பதிலாக 'பாரதம்' என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் பெயரை 'பாரதம்' என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான சந்தேகங்களும், சர்ச்சைகளும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் 'இந்தியா'வுக்கு பதிலாக 'பாரதத்தின்' தலைவராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரது மேஜையில், 'இந்தியா'வுக்கு பதிலாக 'பாரதம்' (பாரத்) என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாநாடு தொடர்பான ஏராளமான அதிகாரபூர்வ ஆவணங்களிலும் பாரதம் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தெரிந்தே எடுக்கப்பட்ட முடிவு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரம் மிகுந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பாரதம் என்ற பெயரில் பிரதமர் மோடி பங்கேற்றிருப்பதன் மூலம், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.