< Back
தேசிய செய்திகள்
சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் - பிரதமர் மோடி பெருமிதம்
தேசிய செய்திகள்

சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் - பிரதமர் மோடி பெருமிதம்

தினத்தந்தி
|
28 Feb 2023 2:13 AM IST

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சாமானிய மக்களும் விமானத்தில் பறப்பதை பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.

புதிய விமான நிலையம் திறப்பு

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.450 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு அடுத்தபடியாக அம்மாநிலத்தில் 2-வது பெரிய விமான நிலையமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் ரூ.3,600 கோடி மதிப்பீட்டிலான பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள்

இந்தியாவின் விமான போக்குவரத்து சந்தை விரிவடைந்து வருகிறது. நாட்டிற்கு எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும். அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்ற தேவைப்படுவார்கள். முந்தைய அரசுகளின் அணுகுமுறையை போல் அல்லாமல், தற்போதைய அரசு சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் தொடங்க முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 2014-ம் ஆண்டு வரை 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பல சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் மேலும் 74 விமான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சாதாரண மக்களும்...

சாதாரண குடிமக்களும் விமானத்தில் பயணிக்கும் வகையில் மலிவு விலையில் விமான பயணத்தை உறுதி செய்ய 'உதான்' திட்டம் தொடங்கப்பட்டது. ஹாவாய் செருப்பு அணியும் சாமானிய மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும். அது தற்போது நடந்து வருவதை நான் பார்க்கிறேன்.

இவ்வாறு மோடி கூறினார்.

விழாவில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் கர்நாடக மந்திரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்