அவதூறு வழக்கில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து ராகுல்காந்திக்கு விலக்கு - ஜார்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவு
|அவதூறு வழக்கில் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து ராகுல்காந்திக்கு விலக்கு அளித்து ஜார்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, 'மோடி' என்ற பெயர் வைத்திருப்பவர்கள் திருடர்கள் என்று பேசியதாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு சூரத் கோர்ட்டு, 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நிலையில், அவர் எம்.பி. பதவியை இழந்தார்.
இதற்கிடையே, அதே பேச்சுக்காக ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் பிரதீப் மோடி என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதை எதிர்த்து ஜார்கண்ட் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே.திவிவேதி, ராஞ்சி கோர்ட்டில் ராகுல்காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தார். ராகுல்காந்திக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.