< Back
தேசிய செய்திகள்
நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களை அவமதிப்பதா? பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்
தேசிய செய்திகள்

நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களை அவமதிப்பதா? பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

தினத்தந்தி
|
8 May 2024 5:10 PM IST

திரவுபதி முர்முவுக்கு நற்பெயர் இருந்தும், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அவரை ஏன் தோற்கடிக்க முயன்றது என்பது இப்போது தெரிகிறது என மோடி கூறினார்.

புதுடெல்லி:

இந்தியர்களின் நிறம் குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் சீனர்கள் போலவும், மேற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் உள்ளனர். ஆனாலும் நாம் அனைவரும் சகோதர, சதோதரிகள்" என கூறியிருந்தார்.

மக்களின் நிறம் குறித்து பேசிய பிட்ரோடாவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிட்ரோடாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிறத்தின் அடிப்படையில் அவமானப்படுத்துவதை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார். இதுதொடர்பாக பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-

இன்று நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். யாராவது என்னைத் திட்டினால் கூட நான் கோபப்பட மாட்டேன். பொறுத்துக்கொள்வேன். ஆனால் இளவரசரின் (ராகுல் காந்தி) தத்துவஞானி இவ்வளவு பெரிய அவமதிப்பை செய்துள்ளார். இது என்னை கோபத்தில் ஆழ்த்தியது.

தோல் நிறத்தின் அடிப்படையில் நாட்டு மக்களை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அதற்கு இளவரசர் (ராகுல் காந்தி) பதிலளிக்க வேண்டும். திரவுபதி முர்முவுக்கு நற்பெயர் இருந்தும், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அவரை ஏன் தோற்கடிக்க முயன்றது என்பது இப்போது தெரிகிறது.

இளவரசரின் அங்கிள் அமெரிக்காவில் வசிக்கிறார் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். அந்த அங்கிள் அவரது தத்துவஞானி மற்றும் வழிகாட்டியாக இருக்கிறார். அவர் ஒரு பெரிய ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார். யாருடைய தோல் நிறம் கருமையாக இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார். அதாவது, அவர் (பிட்ரோடா) தோல் நிறத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள பலரை அவமதித்துள்ளார். தோலின் நிறம் எதுவாக இருந்தாலும், நம் அனைவரின் நிறத்தைப் போன்று இருந்த பகவான் கிருஷ்ணரை மக்கள் வணங்குகிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்