< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று தொடக்கம்
தேசிய செய்திகள்

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
16 Nov 2022 12:15 AM IST

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக உயர்கல்வி மற்றும் அறிவியல், தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு தொடக்க விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நாளை(இன்று) நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 9 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த மாநாட்டில் 575-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள்(ஸ்டார்ட்அப்) கலந்து கொள்கின்றன. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பொதுமக்களுக்கு அனுமதி

இந்த மாநாட்டில் 75 கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. பெரிய அளவிலான தரவுகள், மின் சாதன ஷிப்புகள், மெஷின் கற்றல், 5ஜி, ரோபோடிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பங்கள், உயிரி எரிபொருள், மின் வாகனங்கள் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் குறித்து கருத்தரங்குகள் நடக்கின்றன. இந்த மாநாட்டில் ஜப்பான், நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லிதுவேனியா, கனடா உள்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேச உள்ளனர்.

இந்த மாநாட்டில் நடைபெறும் அனைத்து கருத்தரங்குகளும் சமூக வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த மாநாட்டு கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம். 3 நாட்களும் தினமும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை பொதுமக்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

மேலும் செய்திகள்